Wednesday, February 20, 2008

வெற்றி எப் எம் - உத்தியோகபூர்வ ஒலிபரப்பு எப்போது?


99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை கொழும்பில் ஆரம்பித்திருக்கும் புதிய தமிழ் வானொலியான வெற்றி எப் எம் நல்ல பாடல்களை தொடர்ச்சியாக ஒலிபரப்பி வருகிறது. ஆயினும் அவர்களது அலைவரிசை பலவீனமாக இருப்பதால் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் கூட வெற்றி எப் எம் வானொலியை தெளிவாகக் கேட்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் 99.6 அலைவரிசையில் வேறு வானொலிகளின் அலைவரிசைகளின் இடையூறுகள் மிக அதிகம்.
இத்தகைய இடையூறுகளை களைந்து வெற்றி எப் எம் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆங்கிலத்தை ஆராதிக்கும் தமிழ் மொழியின் சக்தி!


சக்தி தொலைக்காட்சியும் வானொலியும் தங்களை தமிழ் மொழியின் சக்தியாக பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இது மகிழ்ச்சி தரும் விடயம்தான். ஆனால், அந்தப் பிரகடனத்துக்கு ஏற்ப அவை நடந்துகொள்கின்றனவா என்றால்...?? நிகழ்ச்சிகளின் தலைப்புகளும், தொலைக்காட்சி அறிவிப்பாளர்களின் தொகுப்பும் ஆங்கிலத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல் அமைந்து வருவதை பார்வையாளர்களால் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இலங்கை தனியார் தொலைக்காட்சிகளில் தமிழுக்கென்று இருக்கும் சக்தி தொலைக்காட்சியும் இவ்வாறு ஆங்கில மோகத்தில் விழுந்துகிடப்பது வேதனைக்குரியது. தமிழுக்குரிய உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்க சக்தி தொலைக்காட்சி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.


சக்தி தொலைக்காட்சியால் மேற்கொள்ளப்படும் தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்பாக காதோரம் தொடந்தும் அவதானித்துவருகிறது.


சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளரே இது உங்கள் கவனத்துக்கு!

புதிய பானையில் பழைய சோறு நேத்ரா tv


நேத்ரா தேசிய தமிழ் தொலைக்காட்சியாக ஆரம்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. இருந்தாலும் ஏற்கனவே இருந்த ஒளிபரப்பிற்கும் புதிய ஒளிபரப்பிற்கும் பெயரளவில் மாத்திரம்தான் மாற்றம் தெரிகிறது.
10 வருடங்களுக்கு முன்பு ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மீள்ஒளிபரப்புவதும் கிரிக்கட் போட்டிகளுக்காக நிகழ்ச்சிகளை நிறுத்துவதும் வேதனையை தருகிறது.